இந்திய தேசிய இயக்கம் பகுதி - I (TNPSC Study material for group exams)

UNIT – VII 

இந்திய தேசிய இயக்கம்

  1. தேசிய மறுமலர்ச்சி - ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் - இந்திய தேசிய காங்கிரஸ் - தலைவர்கள் உருவாதல் - பி. ஆர். அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ. சிதம்பரனார், ஜவகர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ் மற்றம் பலர்,
  2. விடுதலைப் போராட்டத்தின் பல்வேற நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள்.
  3. வகுப்புவதாம் மற்றும் தேசப்பிரிவினை.

ஐரோப்பியர் வருகை

  • நன்கு நிறுவப்பட்டு முறைப்படுத்தப்பட்ட இந்திய வணிகத்திற்கு வெளியே இருந்து வந்த முதல் அதிர்ச்சி என்பது போர்த்துகீசியரிலிருந்து தொடங்கிய ஐரோப்பியரின் வருகையே ஆகும். 
  • ஐரோப்பாவிற்குத் தேவையான நறுமணப் பொருட்களை நேரடியாகப் பெறுவது என்பதே ஐரோப்பியரின் நோக்கமாக இருந்தது.
  • பண்டைய நாட்களில் நறுமணப் பொருட்கள் கடல் வழியாகப் பாரசீகவளைகுடாவிலுள்ள துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நிலவழிப் பாதை மூலம் மத்திய தரைக்கடல் பகுதியைச் சென்றடையும். 
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சந்தைகளில் இந்தியத் துணிகளுக்கு இருந்த உலகளாவிய தேவையால் இந்தியத் துணிகள் செலாவணி ஊடாகமாயிற்று.
  • இந்தோனேசியத் தீவுகளில் சோழமண்டலக்கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த வண்ணம் பூசப்பட்ட துணி(களாம்காரி)களுக்கான தேவை டச்சுக்காரரையும் ஆங்கிலேயரையும் கிழக்குக்கடற்கரையில் தங்கள் நிறுவனங்களை அமைத்துக்கொள்ளச் செய்தது.

இந்திய வணிகருடன் கூட்டமைப்பு

  • இந்தியாவில் மிகப்பெரும் வணிகர்களின் உதவியும் உறவும் இருந்தால் தான் தாங்கள் வணிகத்தில் வெற்றிபெற இயலும் என்பதைத் தொடக்கத்திலிருந்தே ஐரோப்பியர் உணர்ந்தனர்.
  • இந்திய வணிகர்களும் ஐரோப்பியர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தக் கிடைத்த புதிய வணிகவாய்ப்பாக கருதி இந்திய வணிகர்கள் ஐரோப்பிய வணிகர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.
  • சூரத் நகரில் பிரச்சசைகள் ஏற்பட்டதால் தங்களுக்கு ஆதரவு தரும் முகலாய அரசாங்கத்தின் பாதுகாப்போடு வணிகர்கள் செயல்பட்டு வந்தனர்.
  • பழவேற்காடு, ஆங்கிலேயரின் கீழிருந்த சென்னை, பிரெஞ்சுக்காரரின் கீழிருந்த புதுச்சேரி ஆகியன காலனியாதிக்க நிலப்பகுதிகளைத் தங்களுக்குப் பாதுகாப்பான இடங்களாக இந்திய வணிகர்கள் கருதினர்.
  • தமிழகப் பகுதியில் தொடரும் அரசியல் குழப்பங்களிலிருந்து விலகி இவ்விடங்களில் தங்கள் வணிகத்தைப் பாதுகாப்பாக செய்ய இயலும் என கருதினார்கள்.
  • ஐரோப்பியருடன் இந்திய வணிகர் மேற்கொண்ட வணிக நடவடிக்கைகள் 1700 ஆம் ஆண்டு வரை பாதகமற்ற முறையிலிருந்தன.
  • சூரத்தில் மராத்தியப் படையெடுப்புக் குறித்த அச்சத்தினாலும் தகுந்த பாதுகாப்பு வழங்க இயலாத முகலாய அரசின் இயலாமையினாலும் சூழ்நிலை மாறியது.
  • சென்னையில் தங்களை வலுவாக நிலை நிறுத்திக்கொண்ட ஆங்கிலேயரால் ஐரோப்பாவிற்கானத் துணி ஏற்றமதியை அதிகரிக்க இந்திய வணிகர்களை ஏற்கவியலாத வணிக நிபந்தனைகளை ஏற்க வைக்க முடிந்தது.
  • படிப்படியாக ஆங்கிலேய வணிகருக்கும் இந்திய வணிகருக்கும் இடையிலான அதிகார உறவு மாறத் தொடங்கியது.
  • முந்தைய நூற்றாண்டில் வணிகப் பார்வையில் கதாநாயகர்களாக இருந்த வர்த்தக இளவரசர்கள் முற்றிலும் காணாமல் போனதை நம்மால் பார்க்கமுடிகிறது.
  • ஐரோப்பாவில் இந்தியத் துணிகளுக்கான தேவை அதிகரித்ததால், அது இந்திய பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • தொடக்கத்தில் இத்தேவை அதிகரிப்பு உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பயனளிப்பதாக அமைந்தது.
  • உற்பத்திக்காரணிகளும்( தொழிலாளர், கச்சாப்பொருள், மூலதனம்) நேர்மறையாக வினையாற்றின.
  • இருந்தபோதிலும் ஐரோப்பாவின் தேவை தொடர்ந்து அதிகரித்த போது அதிக உற்பத்திக்காகக் கொடுக்கப்பட்ட நெருக்கடி மிக விரைவாக உற்பத்தி ஆதாரங்களைப் பாதித்தது.
  • தெற்கே அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்களும், கச்சாப் பொருட்களுக்கும் உணவு தானியங்களுக்கும் ஏற்பட்ட பற்றாக் குறையும் நெசவாளர்கள் கூடுதலாக ஏற்க வேண்டிய சுமைகளாயின.
  • இப்படி அதிகமான வணிகவாய்ப்புகள் குறுகிய காலத்திற்குப் பயனளித்ததாலும் நீண்டகால விளைவென்பது அவ்வாறே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
  • இந்த 150 வருட காலத்தில் இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர் படிப்படியான மாற்றத்திற்கு உள்ளாயினர்.
  • வணிகராயிருந்த ஆங்கிலேயர் வணிகப் பேரரசை நிறுவியவர்களாக உருமாறி இறுதியில் நாட்டின் பெரும் பகுதி ஆட்சியாளராக மாறினர்.

ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும் 

இந்தியாவில் போர்த்துகீசியர் (1498 - 1961 )

  • தனது முதல் பயணத்தில் வாஸ்கோடகாமா மூன்று கப்பல்களில் 170 நபர்களோடு வந்தார்.
  • கள்ளிக்கோட்டை அரசர் சாமரின் அவரை நட்புணர்வோடு வரவேற்றார்
  • 1498 ஆகஸ்ட் 29 ஆம் நாள் தன்னுடன் வந்தவர்களில் உயிரோடிருந்த 55 மாலுமிகளுடனும் மூன்றில் இரண்டு கப்பல்களில் இந்தியச் சரக்குகளுடனும் ஊர் திரும்பும் பயணத்தை மேற்கொண்டார்.
  • வாஸ்கோடகாமாவின் வெற்றி போர்ச்சுகலை 1200 மாலுமிகளை 13 கப்பல்களுடன் பெட்ரோ ஆல்வரிஸ் கேப்ரல் என்பவரின் தலைமையில் மீண்டும் அனுப்பி வைக்கச் செய்தது.
  • 1502 அக்டோபர் 29 ஆம் நாள் 20 கப்பல்களுடன் வாஸ்கோடகாமா மீண்டும் கள்ளிக்கோட்டை வந்தார்.
  • அங்கிருந்து அதிக வசதிகளைக் கொண்ட கொச்சிக்குச் சென்றார்.
  • ஐரோப்பிய வணிகம் பெருக வேண்டுமெனில் வணிகத்தின் மீது அராபியர்கள் கொண்டிருந்த முற்றுரிமை உடைக்கப்பட வேண்டுமென்பதை அவர் உணர்ந்தார்.
  • கொச்சி மற்றும் கள்ளிக்கோட்டையின் இந்து மன்னர்களிடையே நிலவிய பகைமையை அவர் தனது நலனுக்குப் பயன்படுத்திக்கொண்டார்.
  • இந்தியப் பெருங்கடல், செங்கடல் வணிகத்தில் அரேபியர் கொண்டிருந்த முற்றுரிமையை ஒழித்தார். 
  • போர்ச்சுக்கல்லுக்கு திரும்பும் முன் கொச்சியில் ஒரு சரக்குக்கிடங்கையும் கண்ணூரில் ஒரு சிறைச்சாலையையும் நிறுவினார்.
  • போர்த்துகீசிய வணிகம் ஒருங்கிணைக்கப்படல்
  • ஆண்டுதோறும் பயணம் மேற்கொள்வதை நிறுத்திய போர்த்துகீசியர்.
  • இந்தியாவில் ஒரு ஆளுநரை அமர்த்த முடிவு செய்தனர்.

பிரான்ஸிஸ்கோடிஅல்மெய்டா

  • முதல் ஆளுநரான பிரான்ஸிஸ்கோடிஅல்மெய்டா நீலநீர்க்கொள்கையைக் கடைபிடித்தார்.
  • இக்கொள்கையின் மூலம் அவர் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து கப்பற்படையை வலுப்படுத்தினார்.
  • கள்ளிக்கோட்டை மன்னன் சாமுரின் மற்றும் எகிப்திய சுல்தானின் கப்பற்படையையும் மூழ்கடித்தார். 
  • கொச்சி, கண்ணூர், மலபார் கடற்கரையின் ஏனைய இடங்களிலும் கோட்டைகளைக் கட்டினார்.

அல்புகர்க்(1509 - 1515)

  • அல்மெய்டாவிற்குப் பின்னர் அல்புகர்க்(1509 - 1515) பதவியேற்றார்.
  • இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை உண்மையில் நிறுவியவர் இவரே.
  • பீஜப்பூரின் அரசர் யூசுப் அடில்கானைத் தோற்கடித்த இவர் 1510 இல் கோவாவைக் கைப்பற்றினார். 
  • கோவாவை முக்கிய வணிகமையமாக வளர்த்தெடுத்தார். 
  • அனைத்து மதம் சார்ந்த மக்களையும் கோவாவில் குடியேற ஊக்கப்படுத்தினார். 
  • ஐரோப்பியர் இந்தியப் பெண்களைத் திருமணம் கொண்டு போர்த்துகீசியர் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் குடியேறுவதை ஆதரித்தார்.
  • இந்தியாவிற்கும் - சீனாவிற்கும், மெக்காவிற்கும் - கெய்ரோவிற்கும் இடைப்பட்ட வணிகத் தடங்களின் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் வணிகர்களைத் தோற்கடித்த அவர் மலாக்வை ( மலேசியாவில் உள்ளது) கைப்பற்றியதால் பேரரசு விரிவடைந்தது.
  • அராபியரைத் தாக்கி ஏடன் நகரைக் கைப்பற்றுவதில் வெற்றிபெற்றார்.
  • 1515 இல் ஆர்மசு துறைமுகம் அவர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
  • உடன் கட்டை(சதி) ஏறும் பழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார்.

இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை வலிமைப்படுத்துவதில் மேலும் இரண்டு ஆளுநர்கள் முக்கியப் பங்காற்றினர். 

அவர்கள் நினோடா குன்கா, ஆன்டானியோடி நொரன்கா ஆகியோர்ராவார்.

நினோடா குன்கா

  • நினோடா குன்கா 1534 இல் பசீனையும் 1537 இல் டையூவையும் கைப்பற்றினார்.
  • 1559 இல் டாமன் துறைமுகம் இமாத்- உல் - முல்க் என்பவரிடமிருந்து பறிக்கப்பட்டது.
  • இதே சமயத்தில் 16 ஆம் நூற்றாண்டில் இடைப்பட்ட பகுதியில் கொழும்புவில் ஒரு கோட்டைக் கட்டியதைத் தொடர்ந்து இலங்கையிம் மீதான போர்த்துகீசியரின் கட்டுப்பாடு அதிகமானது.

டி நொரன்கா

  • டி நொரன்காவின் காலத்தில் தான் (1571) முகலாய அரசர் அக்பர் குஜராத்திலுள்ள காம்பேவுக்கு வந்தார்.
  • போர்த்துகீசியருக்கும் முகலாயருக்கும் இடையிலான தொடர்பு உருவானது.
  • ஸ்பெயின் நாட்டு அரசர் இரண்டாம் பிலிப் 1580 இல் போர்த்துக்கல் நாட்டைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டார்.
  • போர்த்துகீசியரை முதலில் இலங்கையில் தோற்கடித்த டச்சுக்காரர் பின்னர் மலபார் கடற்கரையிலிருந்த அவர்களில் கோட்டையையும் கைப்பற்றினர்.
  • இதனால் போர்த்துகீசியர் இந்தியாவில் தங்கள் குடியேற்றங்களைப் பாதுகாப்பதைக் காட்டிலும் பிரேசிலின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

போர்த்துகீசிய வருகையின் தாக்கம் 

  • இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியர் இந்திய அரசர்களை வென்று அவர்களின் பகுதிகளைக் கைப்பற்றினர்.
  • இந்திய அரசர்கள் எப்போதும் பிரிந்திருந்தனர். அதை ஐரோப்பியர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர்.
  • போரிடுவதில் ஐரோப்பியர் புதிய முறைகளைக் கையாண்டனர்.
  • வெடிமருந்தும், வலிமைவாய்ந்த பீரங்கிப்படையும் முக்கியப் பங்கு வகித்தன.
  • போர்த்துகீசியரால் அரேபியரின் வணிக முற்றுரிமையைக் கட்டுப்படுத்த முடிந்தது. 
  • ஆனால் உண்மையில் அது அவர்களுக்கு உதவவில்லை மாறாக அது ஆங்கிலேயருக்குப் பயனளித்தது.
  • ஆங்கிலேயர் கடற்கொள்ளையரை அழித்து கடற்பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றினார்கள்.
  • தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் இடையிலான திருமணங்களைப் போர்த்துகீசியர்கள் ஊக்குவித்ததன் விளைவாக ஒரு புதிய யூரேசிய இனக்குழு உருவானது.
  • இவர்கள் பின்னாலில் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலுமிருந்த போர்த்துகீசியரின் காலனிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • சென்னை சாந்தோம் போர்த்துகீசியரின் வருகைக்கான முக்கியச் சான்றாக உள்ளது. 
  • போர்த்துகீசியர் கருப்பர் நகரம் (Black Town) என்று மயிலாப்பூரை அழைத்தனர்.
  • ஆங்கிலேயர்கள் கருப்பர் நகரம் என்று ஜார்ஜ் டவுனை அழைத்தனர்.

போர்த்துகீசியரின் குடியேற்றங்களுக்குப் பிறகு ஏசு சபையைச் சார்ந்த சமயப் பரப்பாளர்கள் இந்தியா வந்தனர். 

அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் 

இராபர்- டி - நொபிலி 

  • தமிழிலும் சமஸ்கிருதத்திலும் விரிவாக எழுதினார்.
  • இவர் தமிழ் உரைநடையின் தந்தையெனக் கருதப்படுகிறார்.

ஹென்ரிக்ஸ் 

  • போர்ச்சுகல் நாட்டு யூதரான இவர் தமிழ் அச்சுப் பதிப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
  • மீன்பிடிக்கும் உரிமை, படகோட்டும் உரிமை, முத்துக்குளித்தல் ஆகியவை தொடர்பாக போர்த்துகீசியருக்கும் கீழைக்கடற்கரையைச் சார்ந்த முஸ்லீம் குழுக்களுக்கும் இடையே 1530 களில் மோதல்கள் நடந்தன.
  • இதைப் பொறுத்தமட்டில், பரதவ மக்களின் ஒரு குழுவானது ஆயுதம் பூண்ட முஸ்லீம் வணிகர்களின் தாக்குதல்களால் தாங்கள் பட்ட துயரங்களை கொச்சியிலிருந்த போர்த்துகீசிய அதிகாரிகளிடம் முறையிட்டு உதவி கேட்டனர்.
  • இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட போர்த்துகீசியர் தங்களது ரோமன் கத்தோலிக்க குருமார்களைக் கீழைக்கடற்கரைக்கு அனுப்ப ஆயிரக்கணக்கான பரதவ குலமக்கள் கத்தோலிக்கக் கிறித்தவ மதத்திற்கு மதம் மாறினர்.

பிரான்ஸிஸ் சேவியர்

  • இதனைத் தொடர்ந்து ஏசு சபையை உருவாக்கியவர்களில் ஒருவரான புனித பிரான்ஸிஸ் சேவியர் 1542 இல் கோவா வந்தடைந்தார். 
  • பின்னர் மதம் மாறியவர்களுக்கு திருமுழுக்கு சடங்கு நடத்துவதற்காகத் தூத்துக்குடி, புன்னைக்காயல் வரை பயணம் மேற்கொண்டர்.
  • சோழமண்டலக்கடற்கரைக் கிராமங்களில் உயர் கோபுரங்களோடு உருவான தேவாலயங்களை இன்றும் காணலாம்.

கார்டஸ்(cartaz) என்ற பெயரில் போர்த்துகீசியர் வழங்கும் பாதுகாப்பை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இல்லையெனில் வன்முறை மூலம் வணிகத்திற்கு இடையூறு செய்யப் போவதாக பயமுறுத்துவர்கள்.

கார்டஸ் முறையில் போர்த்துகீசியர் வணிகர்களிடமிருந்து பணம் பறித்தனர்.

கடற்கொள்ளையர்களுக்கு எதிராக தாங்கள் பாதுகாப்பு வழங்குவதாக கூறிக் கொண்டனர்.

ஆனால் அதைப் போன்ற இடையூறுகளில் பலவற்றை செய்தவர்களும் போர்த்துகீசிய கடற்கொள்ளையரே.

டச்சுக்காரர்கள் (1602 – 1825)

  • ஜேன் ஹீயுன் வான் லின்சோடென் என்னும் நெதர்லாந்தைச் சேர்ந்த லிஸ்பனில் வாழ்ந்து வந்த வணிகர் டச்சுக்காரரின் முதல் பயணத்தை தென்கிழக்க ஆசியாவை நோக்கி 1595 ஆம் ஆண்டு மேற்கொண்டார். 
  • கீழ்த் திசை நாடுகளோடு வணிகம் செய்வதற்காகப் பல நிறுவனங்கள் வணிகர்களாலும் தனிநபர்களாலும் நிறுவப்பட்டிருந்தன.
  • அரசு தலையிட்டு அவையனைத்தையும் ஒருங்கிணைத்து 1602 இல் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியை உருவாக்கியது.
  • புதிதாக உருவான இக்கம்பெனி இந்தோனேசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவியது.
  • முதல் பன்னாட்டு நிறுவனத்தை உருவாக்கியவர்கள் டச்சுக்காரர்கள் ஆவார்கள்.

அம்பாய்னாபடுகொலை

1623 இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஊழியர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் ஜப்பானியர் அடங்கிய 20 பேர்களை டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் முகவர்கள் இந்தோனேசியாவிலுள்ள அம்பாய்னா என்னும் தீவில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். இது அம்பாய்னா படுகொலை என்றழைக்கப்படுகிறது.

  • டச்சுக்காரர்கள் மலாக்காவை போர்த்துகீசியரிடமிருந்து 1641 இல் கைப்பற்றினர்கள். 
  • மேலும் 1658 இல் இலங்கையைத் தங்கள் வசம் ஒப்படைக்கப் போர்த்துகீசியரைக் கட்டாயப்படுத்தினர்கள்.
  • நறுமணத் தீவுகளில் டச்சுக்காரர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் இந்தியாவில் ஆங்கிலேயரிடம் ஏற்பட்ட பின்னடைவுகளால் அவர்கள் துயருற்றனர்.

தமிழகத்தில் டச்சுக்காரர்கள்

  • 1502 முதல் பழவேற்காட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போர்த்துகீசியர்கள் டச்சுக்காரர்களால் அகற்றப்பட்டனர். 
  • சென்னை நகருக்கு வடக்கே 60 கி.மீ  தொலைவில் அமைந்துள்ள பழவேற்காட்டில் டச்சுக்காரர் ஜெல்டிரியா என்னும் பாதுகாப்புக் கோட்டையைக் கட்டினர்கள்.
  • 400 ஆண்டுகள் கடந்தும் அதன் எச்சங்களை இன்றும் காணலாம்.
  • இக்கோட்டை ஒரு காலத்தில் டச்சுக்காரரின் அதிகாரபீடமாக இருந்தது. 
  • தங்கள் அதிகாரத்தை 1605 இல் மசூலிப்பட்டினத்தில் நிறுவிய டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் சில குடியேற்றங்களை 1610 இல் நிறுவினர்.
  • நாகப்பட்டினம், நாகர்கோவில், புன்னைக்காயல், பரங்கிப்பேட்டை,  கடலூர் (திருப்பாதிரிப்புலியூர்) மற்றும் தேவனாம்பட்டினம் ஆகியவை டச்சுக்காரரின் ஏனைய கோட்டை மற்றும் காலனியாதிக்கப் பகுதிகளாகும்.
  • பழவேற்காடு டச்சுக்கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழமண்டலப் பகுதியின் தலைமையிடமாயிற்று.
  • பழவேற்காட்டிலிருந்து மேலைநாடுகளுக்கு வைரம் ஏற்றுமதி செய்யப்பட்டது. 
  • ஜாதிக்காய், ஜாதிபத்ரி, கிராம்பு ஆகியவையும் இங்கிருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டன. 
  • 17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர் கிழக்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வெடிமருந்து தொழிற்கூடம் ஒன்றை நிறுவினர். அடிமை வியாபாரத்தில் டச்சுக்காரர்கள் ஈடுபட்டனர் என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
  • வங்காளத்திலிருந்தும், குடியேற்றப்பகுதிகளான தேங்காய்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகியவற்றிலிருந்தும் அடிமைகள் பழவேற்காட்டிற்குக் கொண்டு வரப்பட்டனர். 
  • அடிமைகளைப் பிடிப்பதற்காக டச்சுக்காரர்கள் சென்னையில் தரகர்களை நியமித்தனர்.
  • இவர்கள் அனைவரும் சென்னையில் கப்பல்களில் ஏற்றப்பட்டனர். 
  • பஞ்சமும் வறட்சியும் போர்களும் அடிமை வணிகம் செழிக்க உதவின.
  • லெய்டன் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளரான வில் ஓ டிஜிக்(wil O Dijk) என்பவர் அவரது ஆய்வுக் கட்டுரையில் இங்கிருந்தும் வங்காளத்திலிருந்தும் அடிமைகள் டச்சுக் கப்பல்களில் ஏற்றி அனுப்பப்பட்ட அடிமைப் பயணிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளார்.
  • 1621 ஜீன் முதல் 1665 நவம்பர் வரை மொத்தம் 26,885 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அடிமைகளாக அனுப்பப்பட்டடுள்ளனர்.
  • அவர்களில் 1379 நபர்கள் உயிரிழந்தனர். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தஞ்சாவூர், மதுரை மற்றும் செஞ்சி நாயக்க அரசுகளால் உருவான பஞ்சம் போன்ற காரணங்களால் சோழமண்டலத்தில் அடிமை ஏற்றுமதி பெருகியது என அவ்வாய்வாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.
  • இதனைத் தொடர்ந்து பீஜப்பூர் சுல்தான் மேற்கொண்ட படையெடுப்பு தஞ்சாவூரின் வளமான வேளாண் நிலங்களைப் பாழ்படுத்தியதால் மேலும் பலமக்கள் அடிமைகளாயினர்.
  • இக்காலத்தில் (1646 ) ஏறத்தாழ 2118 அடிமைகள் பெரும்பாலும் அதிராம்பட்டினம், தொண்டி மற்றும் காயல்பட்டினம் போன்ற கடற்கரை ஓரமாக அமைந்திருந்த பகுதிகளைச் சார்ந்தவர்களாக இருந்தனர்.

பிரெஞ்சுக்காரர்கள் (1664 - 1954)

  • இந்தியாவுடன் வணிக உறவை மேற்கொள்ள பிரெஞ்சுக்காரர் 1527 ஆம் ஆண்டிலேயே முயற்சி மேற்கொண்டனர்.
  • போர்த்துகீசியராலும் டச்சுக்காரர்களலும் தூண்டப்பட்ட பிரெஞ்சுக்காரர்கள் 1664 இல் உருவாக்கப்பட்ட பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் தங்கள் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கினார்கள். 
  • ஏனைய ஐரோப்பிய நாடுகளின் வணிக நிறுவனங்கள் தனியார் வணிக நிறுவனங்களாக இருக்க பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசர் 14ஆம் லூயியின் திட்டமாக அமைந்தது.
  • அவருடைய நிதியமைச்சரான கோல்பெர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்படுவதற்கு காரணமாக இருந்தார்.
  • பிரான்சின் முயற்சியானது அரசால் தொடங்கப்பட்ட முயற்சியாக இருந்ததால் பொதுமக்களின் ஆர்வத்தை அது ஈர்க்கத் தவறியது.
  • மேலும் வரி விதிப்பதற்கான மற்றொரு வழி என்று அதை மக்கள் கருதினர்.

மடகாஸ்கர் வழியாகப் புதுச்சேரி 

  • 1602 இல் பிரெஞ்சு வணிகர்கள் ஆப்ரிக்காவிலுள்ள மடகாஸ்கரை அடைந்தனர்.
  • மடகாஸ்கரைத் தங்களின் காலனியாதிக்கப் பகுதியாக கொண்டிருந்தாலும் 1674 இல் கடற்கரை ஓரமுள்ள ஒரு சிறு வணிக முகாமைத் தவிர ஏனைய இடங்களைக் கைவிட நேர்ந்தது.
  • இந்தியாவிலிருந்த பிரெஞ்சு முகவரான பெர்பர், செப்டம்பர் 4, 1666 இல் முகலாயப் பேரரசர் ஓளரங்கசீப்பிடமிருந்து அனுமதி ஆணை பெற்று தங்களின் முதல் நிறுவனத்தை டிசம்பர் 1668 இல் டச்சுக்காரரின் எதிர்ப்பையும் மீறி அமைத்தார்.
  • ஓராண்டிற்குள் மசூலிபட்டினத்தில் மற்றும் ஒரு நிறுவனமும் அமைக்கப்பட்டது.
  • இக்காலத்தில் நிறுவனம் (factory) என்பது அயல்நாடுகளிலுள்ள தங்கள் முதலாளிகளுக்காக வணிக முகவர்கள் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடம் என்னும் பொருளைப் பெற்றது.
  • இந்தியாவில் காலூன்ற வலுவான இடம் தேவை என்பதை உணர்ந்த நிதியமைச்சர் கோல்பெர் ஹேய் ( ஜேக்கப் பிளான் குயிட் டி லா ஹேய் ) என்பவரின் தலைமையில் கப்பற்படை ஒன்றை அனுப்பி வைத்தார்.
  • சாந்தோமிலிருந்தும் மயிலாப்பூரிலிருந்தும் டச்சுக்காரர்களை வெளியேற்றுவதில் பிரெஞ்சுக்காரரர்கள் 1672 இல் வெற்றி பெற்றனர். 
  • டச்சுக்காரர்களுக்கு எதிராகப் பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியான உள்ளூர் ஆளுநர் செர்கான் லோடியின் உதவியை பிரெஞ்சுக்காரர்கள் நாடினர்கள்.
  • பீஜப்பூரின் எதிரியான கோல்கொண்டா சுல்தானோடு டச்சுக்காரர்கள் நட்பு கொண்டனர். 
  • பிரெஞ்சுக்காரர் குடியேறுவதற்குப் பொருத்தமான இடமென புதுச்சேரியை செர்கான் லோடி வழங்கினார்.
  • 1673 இல் புதுச்சேரி ஒரு சிறிய மீனவக் கிராமமாக இருந்தது.
  • மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சூரத் வந்த பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார்.
  • இந்தியாவில் பிரெஞ்சுக் குடியேற்றங்களின் அதிகார மையமாக அதை உருவாக்கினார்.
  • நாங்கள் கடந்து சென்ற கிராமப்புறப் பகுதி( புதுச்சேரிக்கு வெளியேயுள்ள பகுதி) மிக நன்றாக விவசாயம் செய்யப்பட்டிருந்தது. மிக அழகாகவும் இருந்தது. அரிசி ஏராளமாகக் காணப்பட்டது. எங்கே நீர் இருந்ததோ அங்கே பருத்தி விளைவிக்கப்பட்டது. புதுச்சேரி நிலப்பரப்பை குறித்து பிரான்ஸிஸ் மார்ட்டின் தனது நாட்குறிப்பில் எழுதியது.

டச்சுக்காரருடன் போட்டியும் போர்களும்

  • புதுச்சேரியைத் தங்கள் குடியேற்றமாக்கும் முயற்சியில் பிரெஞ்சுக்காரர் மிகவும் சிரமப்பட்டனர்.
  • தங்களின் முக்கியப் போட்டியாளரான டச்சுக்காரர்களை முதலில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
  • பிரான்சும் ஹாலந்தும் 1672 இலிருந்து தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தன.
  • இந்தியாவில் பிரெஞ்சக்காரர்களுக்குப் போதுமான நிதி, ஆயுதம், வீரர்கள் இல்லை.
  • ஏனெனில் அவை வங்காளத்திலிருந்த மற்றொரு பிரெஞ்சுக் குடியேற்றமான சந்தன் நகருக்கு (சந்திர நாகூர்) கொண்டு செல்லப்பட்டிருந்தன.
  • ஆகவே 1693 இல் புதுச்சேரியை டச்சுக்காரர்கள் எளிதாக கைப்பற்ற முடிந்தது.
  • புதுச்சேரி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் டச்சுக்காரரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
  • 1697 இல் ரிஸ்விக் உடன்படிக்கையின் படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுகாரருக்குத் தரப்பட்டது.
  • இருந்த போதிலும் 1699 இல் தான் அது பிரெஞ்சுக்காரர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
  • 1706 இல் பிரான்ஸிஸ் மார்ட்டின் இயற்கை எய்தும் வரை அதன் ஆளுநராக இருந்தார்.
  • பிரெஞ்சுக்காரர் மேற்கொண்ட பெரு முயற்சியின் விளைவாய 1725 இல் மாகியையும் 1739 இல் காரைக்காலையும் பெற்றனர்.
  • வங்காளம் பகுதியில் காசிம் பஜார், சந்தன்நகர், பாலசோர் ஆகிய இடங்களில் தங்களது குடியேற்றங்களை நிறுவி விரிவுபடுத்துவதில் பிரெஞ்சுக்காரர் வெற்றி பெற்றனர்.
  • பியரி பெனாய்ட் டூமாஸ் என்பவர் (1668 - 1745) புதுச்சேரியின் மற்றுமொரு சிறந்த ஆளுநர் ஆவார்.
  • இருந்த போதிலும் தங்களை விட மிகவும் வலிமை வாய்ந்த போட்டியாளரான ஆங்கிலேயரின் பயமுறுத்துதல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.
  • இறுதியில் தாங்கள் சேகரித்த செல்வம் அனைத்தையும் ஆங்கிலேயரிடம் இழந்தனர்.
  • பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கை புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் சந்தன்நகர் ஆகிய இடங்களில் இன்றும் கண் கூடாகக் காணலாம்.

டேனியர்கள்

  • டென்மார்க் (நார்வே 1813 வரை டென்மார்க்குடன் இணைந்திருந்தது)
  • இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் குடியேற்றங்களைக் கொண்டிருந்தது.
  • தமிழ்நாட்டில் தரங்கம்பாடி, மேற்கு வங்காளத்தில் செராம்பூர் மற்றும் நிக்கோபர் தீவுகள் ஆகியன டேனியர் வசம் இருந்த பகுதிகளாகும்.
  • 1616 மார்ச் 17 ஆம் நாள் டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டியன் ஒரு பட்டயத்தை வெளியிட்டதன் மூலம் டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனியை உருவாக்கினார்.
  • டேனிய வணிகரிடையே இந்நிறுவனத்திற்கு பெரும் ஆதரவு ஏதுமில்லை.
  • 1618 இல் கடற்படைத் தலைவர் ஒவி ஜெடி இலங்கைக்கு முதல் கடற்பயணத்தை மேற்கொண்டார்.
  • டேனியரால் இலங்கையோடு வணிக ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ள இயலவில்லை.
  • ஏமாற்றத்தோடு திரும்புகின்ற வழியில் காரைக்காலுக்கு அருகே அவர்களின் முக்கியக் கப்பல் போர்த்துகீசியரால் மூழ்கடிக்கப்பட்டது.
  • சிக்கிக் கொண்ட 13 மாலுமிகளும் அவர்களின் வணிக இயக்குநரான ராபர்ட் கிராப்பி என்பவரும் தஞ்சாவூர் நாயக்க அரசரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • ராபர்ட் கிராப்பி தஞ்சாவூர் அரசரோடு பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தத்தையும் செய்து கொண்டார்கள்.
  • 1620 நவம்பர் 20 ஆம் நாள் கையெழுத்தான அவ்வொப்பந்தத்தின் படி டேனியர்கள் தரங்கம்பாடியையும் அதில் கோட்டை கட்டிக்கொள்ளும் உரிமையையும் பெற்றனர்.
  • தரங்கம்பாடியிலுள்ள டேனியர் கோட்டை அடிக்கடி சாலைகளையும் வீடுகளையும் சேதப்படுத்திய பேரலைகளின் முன் பாதுகாப்பற்றதாக இருந்தது.
  • 30 ஆண்டுப் போரில் பங்கேற்று பெருமளவில் பண இழப்பு அடைந்த போதிலும் அவர்களால் மசூலிப்பட்டினத்தில் ஒரு கிடங்கை அமைக்க முடிந்தது.
  • பாலசோரிலும், ஹீக்ளி ஆற்றின் அருகிலுள்ள பிப்ளி என்ற இடத்திலும் வணிக முகாம்கள் அமைக்கப்பட்டன.
  • இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த டென்மார்க் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தை கலைக்க வேண்டுமென்றனர்.
  • ஆனால் அரசர் நான்காம் கிறிஸ்டியன் அதை எதிர்த்தார்.
  • 1648 இல் அவரின் மரணத்திற்குப் பின்னர் அவருடைய மகன் பிரடெரிக் இந்நிறுவனத்தைக் கலைத்தார்.
  • இரண்டாவது டேனிய கிழக்கிந்தியக் கம்பெனி 1696 இல் தொடங்கப்பட்டது.
  • டென்மார்க்கிற்கும் தரங்கம்பாடிக்கும் இடையிலான வணிகம் மீண்டும் நடைபெறத் துவங்கியது.
  • பலபுதிய வணிக முகாம்கள் அமைக்கப்பட்டன.
  • தஞ்சாவூர் நாயக்க அரசர் தரங்கம்பாடியைச் சுற்றியிருந்த மேலும் மூன்று கிராமங்களைப் பரிசாக அளித்தார்.
  • 1706 ஜீன் 9 ஆம் நாள் டென்மார்க்கிலிருந்து முதன் முதலாக இரண்டு லுத்தரன் சமயப் பரப்பாளர்கள் வந்தனர்.
  • டேனியர்கள் 1755 இல் அந்தமானிலும் நிக்கோபாரிலும் குடியேறினர்.
  • ஆனால் மலேரியா காய்ச்சல் ஏற்படுத்திய அச்சத்தால் அவற்றை 1848 இல் கைவிட்டனர்.
  • நெப்போலினியப் போர்களின் போது டேனியரின் பகுதிகளை ஆங்கிலேயர் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கினர்.
  • 1839 இல் செராம்பூர் ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டது.
  • தரங்கம்பாடி உள்ளிட்ட ஏனைய குடியேற்றங்கள் 1845 இல் விற்கப்பட்டன.

டேனியரும் தமிழகமும் 

  • தரங்கம்பாடியில் டேனியர் கட்டிய கோட்டை இன்றும் சீர்கெடாமல் உள்ளது.
  • டென்மார்க்கிலிருந்து இந்தியா வந்த முதலிரண்டு லுத்தரன் மதப் பரப்பாளர்களான பார்த்தலோமியஸ் சீகன் பால்கு, ஹென்ரிச் புலுட்சா ஆகிய இருவரும் 1706  செப்டம்பரில் தரங்கம்பாடி வந்தனர்.
  • அவர்கள் சமயப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
  • பத்து மாதங்களுக்குள் தங்களால் மதமாற்றம் செய்யப்பட்டோருக்குத் திருமுழுக்கு சடங்கு நடத்தி வைத்தனர்.
  • அவர்களின் பணிகனை உள்ளூர் டேனிய அதிகாரிகளுத் இந்துக்களும் எதிர்த்தனர்.
  • உள்ளூர் மக்களை மதமாற்றம் செய்வதன் மூலம் சீகன் பால்கு கலகத்தைத் தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • கோபன் ஹேகனைச் சேர்ந்த ஒரு மதப்பரப்பாளர் சங்கம் உள்ளூர் கிறித்தவத் திருச்சபையை ஊக்கப்படுத்த நினைத்தது.
  • அதன் படி தனது மதப்பரப்பாளர்களை மத போதனை மட்டும் செய்யுமாறும் ஏனையவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.
  • இருந்த போதிலும் சீகன்பால்கு மற்றவர்கள் நலனில் அக்கறை கொள்வது என்பது மதபோதனையின் உட்பொருளாக உள்ளது என வாதிட்டார்.
  • சீகன் பால்கு ஓர் அச்சுக்கூடத்தை நிறுவினர்.
  • தமிழ்மொழி, இந்திய மதங்கள், பண்பாடு குறித்த நூல்களை வெளியிட்டார்.
  • 1715 இல் அவர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
  • அவரும் அவருடைய சகாக்களும் 1718 இல் கட்டிய தேவாலயக்கட்டடமும் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
  • உள்ளூர் மத குருமார்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு இறையியல் பயிற்சிப் பள்ளியையும் நிறுவினார்.
  • 1719 பிப்ரவரி 23 ஆம் நாள் அவர் இயற்கை எய்திய போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட, பழைய மற்றும் புதிய ஏற்பாடு தமிழில் சுருக்கமாக எழுதப்பட்ட பல ஏடுகள் இரண்டு தேவாலயங்கள், இறையியல் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றையும் புனித நீராட்டல் சடங்கை முடித்திருந்த 250 கிறித்தவர்களையும் விட்டுச் சென்றார்.

ஆங்கிலேயரின் வருகை

ஆங்கிலக்கிழக்கிந்திய வணிக நிறுவனம்

  • இலண்டன் நகரின் லேடன் ஹால் வீதியைச் சேர்ந்த ஒரு வணிகக்குழு, கீழைநாடுகளுடனான பெரும் இலாபத்தை ஈட்டித் தரும் நறுமணப் பொருட்கள் வியாபாரத்தில் தாங்களும் பங்கு பெற அரசியார் முதலாம் எலிசபெத்திடமிருந்து பட்டயம்(உரிமை ஆணை) ஒன்றைப் பெற்றனர்.
  • ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பணம் படைத்த வணிகரையும் மற்றும் மேட்டுக்குடி மக்களையும் பங்குதாரர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • இந்நிறுவனம் ஒரு ஆளுநராலும் 24 இயக்குநர்களைக் கொண்ட குழுவாலும் மேலாண்மை செய்யப்பட்டது.
  • 1611 இல் அரசர் முதலாம் ஜேம்ஸ், வில்லியம் ஹாக்கின்ஸ் மூலம் இந்தியாவுடன் இயல்பாக வணிகம் செய்யும் அனுமதியை முகலாய அரசர் ஜஹாங்கீரிடம் பெற்றார்.
  • ஆங்கிலேயர் சூரத்தில் சில வணிக உரிமைகளைப் பெற்றனர்.
  • குஜராத்தின் முகலாய ஆளுநரான இளவரசர் குர்ரம் ஆங்கிலேயருக்கு வணிக உரிமைகளை வழங்கினார்.
  • ஆனால் இப்பகுதிகளில் போர்த்துகீசியர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததால் ஆங்கிலேயரால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை.
  • 1639 இல் சந்திரகிரியின் அரசர்
  • சென்னையை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கொடுத்து அதில் கோட்டைக் கட்டிக் கொள்ளும் அனுமதி வழங்கினார். 
  • கட்டப்பட்ட கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.
  • இந்திய மண்ணில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழு முதன் முதலாகப் பெற்ற நிலப்பகுதி இதுவே ஆகும்.
  • சென்னையில் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் மீது 1645 ஆம் ஆண்டு கோல்கொண்டா அரசர் படையெடுத்து பாழ்படுத்தினார்.
  • 1687 இல் ஔரங்கசீப் கோல்கொண்டாவைக் கைப்பற்றிக் கம்பெனியின் பகுதிகளை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
  • ஆனால் ஆங்கிலேயருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உரிமைகள் தொடர்ந்தன.
  • குறுகிய காலத்திற்குள் மசூலிப்பட்டினத்திற்கு மாற்றாகக் கம்பெனியின் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியின் தலைமையிடமாக சென்னை மாறியது.
  • அரசர் இரண்டாம் சார்லஸ் திருமணத்தின் போது மணக்கொடையாகப் பெற்ற பம்பாய் தீவு 1668 இல் கம்பெனிக்கு வழங்கப்பட்டது.
  • 1683 ஆம் ஆண்டுப் பட்டயம் கம்பெனிக்குப் படைகளை உருவாக்கிக் கொள்ளவும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றிலுள்ள நாடுகளுக்கு எதிராகப் போர் அறிவிப்புச் செய்யவும் அமைதி உடன் படிக்கை மேற்கொள்ளவும் உரிமை வழங்கியது.
  • 1684 இல் சென்னை ஒரு மாகாணமாக உருவானது.
  • 1688 இல் சென்னை 1 மேயரையும், 10 உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அமைப்பை பெற்றிருந்தது.
  • 1693 இல் சென்னையைச் சுற்றியுள்ள 3 கிராமங்களையும் 1702 இல் மேலும் 5 கிராமங்களையும் பெற்றது.

வங்காளம்

  • ஆங்கிலேயருக்கு வங்காளத்தில் வணிக உரிமைகளைப் பெறுவது நீண்டகாலப் போராட்டமாக அமைந்தது.
  • முகலாய அரசர் ஷாஜகானின் இரண்டாவது மகனும் வங்காளத்தின் ஆளுநருமான ஷா சுஜா விடமிருந்து கம்பெனி சில வணிக உரிமைகளைப் பெற்றிருந்தது.
  • ஆனால் அவ்வுரிமைகள் முகலாய அரசால் முறையாக உறுதி செய்யப்படவில்லை.
  • 1608 இல் வங்காளத்திலிருந்த ஆங்கிலேயர் வணிக உரிமைகளைப் பெற்றனர்.
  • ஆனால் ஆங்கிலேயரின் வணிக உரிமைகளில் உள்ளூர் அதிகாரிகள் தலையிட்டதால் கம்பெனி முகலாய அரசின் பிரதிநிதியாக வங்காளத்தை நிர்வகிக்கும் ஆட்சியாளருக்கு எதிராகப் போர் அறிவிப்புச் செய்தது.
  • 1690 இல் அமைதி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி சுதநுதி என்ற இடத்தில் தனது முதல் குடியேற்றத்தை நிறுவியது.
  • இவ்விடமே பிற்காலத்தில் கல்கத்தாவாயிற்று.
  • 1696 இல் அங்கு கோட்டை கட்டப்பட்டது.
  • 1698 இல் சுதநுதி, காளிகட்டா மற்றும் கோவிந்தப்பூர் ஆகிய கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையைக் கம்பெனி பெற்றது. 
  • இதற்குப் பதிலாக கம்பெனி ஆண்டுதோறும் ரூ. 1,200 செலுத்தியது.
  • கல்கத்தாவில் கட்டப்பட்ட புனித வில்லியம் கோட்டை 1770 இல் மாகாணத்தின் தலைமையிடமாயிற்று.

Comments

Popular posts from this blog

சிந்துவெளி நாகரிகம் பகுதி - II

குப்தர்கள் பகுதி - I

டெல்லி சுல்தான்கள் பகுதி I